கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அகரம் அருகே உள்ள ஆவத்துவாடி கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். பக்தர்கள் மீது நடந்து சென்ற பூசாரி
விழாவின் முக்கிய நிகழ்வாக, கோயில் பூசாரி தலையில் பூங்கரகம் சுமந்து, மேளதாளங்கள் மற்றும் பம்பை இசை முழங்க அருள் வந்து ஊர்வலமாகச் சென்றார்.

அப்போது, கோயிலின் முக்கிய வீதிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஈரத் துணிகளுடன் தரையில் வரிசையாகக் கவிழ்ந்து படுத்திருந்தனர். அருள் வந்த நிலையில் இருந்த பூசாரி, தரையில் படுத்திருந்த பக்தர்கள் மீது நடந்து சென்று ஆசி வழங்கினார். இவ்வாறு செய்வதன் மூலம் தங்களது தீராத நோய்கள் மற்றும் கஷ்டங்கள் நீங்குவதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கோயில் முன்புள்ள காவல் தெய்வமான குதிரை சிலைக்கு, சமைக்கப்பட்ட கொள்ளு தானியத்தைப் படையலிட்டு பூசாரி ஊட்டினார். இவ்வாறு குதிரைக்குக் கொள்ளு ஊட்டினால், திருமணம் ஆகாத வரன்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பதும், குடும்ப அபிவிருத்தி அடைந்து தோஷங்கள் விலகும் என்பதும் இப்பகுதி மக்களின் நீண்ட கால நம்பிக்கையாக உள்ளது.


முன்னதாக, கிராமத்துப் பெண்கள் மாவிளக்கு எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். இந்த விழாவில் ஆவத்துவாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *