தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், செப்- 12. தஞ்சாவூர் மேம்பாலம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தலைமையில் ஆசிரியர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.
மேலாண்மை குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 நபர்களில் 10-பேர் உள்ளாட்சி உறுப்பினர்களும், 14-பேர் அங்கு பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நலன் கருதி முதல் தீர்மானமாக "பள்ளியின் பாதுகாப்பையும், மாணவர்கள் பாதுகாப்பையும் உறுதி செய்ய உடனடியாக வார்டன் (பாதுகாவலர்) ஒருவரை நியமனம் செய்ய வேண்டும்." என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வருகிற செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வரை ஆண் மற்றும் பெண் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கண்காணிப்பில் இயங்கி வருகிறது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக பள்ளிக்கு வார்டன் (பாதுகாவலர்) இல்லை, தலைமை ஆசிரியரும் இல்லை அந்தப் பள்ளியில் பணிபுரியும் வணிகவியல் ஆசிரியை தான் பொறுப்பு தலைமை ஆசிரியராக தற்போது இருந்து வருகிறார். இவரும் பள்ளியின் வேலை நேரம் முடிந்ததும் வீடு சென்று பின்னர் வந்து மாலை நேரத்தில் குழந்தைகளை கூடுதல் நேரம் செலவழித்து கவனித்துக் கொள்கிறார். இரவு நேரங்களில் பொறுப்பு தலைமை ஆசிரியர் அவர் இல்லத்திற்கு சென்று விடுவதால் அங்கு தங்கிப் பயிலும் குழந்தைகளுக்கு ஏதாவது உடல்நல குறைபாடுகள் ஏற்பட்டால் அதற்கான தகவல் சொல்லவோ, கவனிப்பதற்கோ அந்த குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கோ உரிய நபர்கள் இல்லாமல் அங்கு சில குழப்பங்கள் நடந்து வருவதாக கூறுகின்றனர். அதனால் உடனடியாக ஒரு பாதுகாவலர் தேவை என்று குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பள்ளிக்கு தஞ்சாவூர் பொறுப்பாளராக "தாசில்தார் ரேங்கில் உள்ள" மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உள்ளார். அவரிடம் பள்ளி குழந்தைகள் நலன் கருதி ஒரு கோரிக்கை மனுவை கொடுக்கும் போது அவர் தன்னால் இதை உடனடியாக நிறைவேற்ற இயலாது என கூறுகிறார். இந்த மனுவை சென்னை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி தான் தீர்வு காண இயலும் என்றும் கூறுகிறார். பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரை அணுகி இது தொடர்பாக மனு கொடுத்த போது மாவட்ட ஆட்சியரும் இது என் அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல என்றும் சென்னை ஆணையரை தொடர்பு கொண்டு தான் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறுகிறாராம். நீண்ட காலமாக அந்த பள்ளியில் வார்டன் மற்றும் தலைமை ஆசிரியர் இல்லை எனவும் அங்கு பெண் பிள்ளைகள் பயில்வதால் வேறு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அல்லது ஏதாவது உடல் நல பாதிக்கப்பட்டாலோ அதை வெளியில் சொல்வதற்கு கூட ஆள் இல்லை. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் அனைவரும் இணைந்து முதல் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
இதற்கு நடவடிக்கை இல்லை என்றால் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மேலாண்மை குழுவின் 14 உறுப்பினர்களும் தங்கள் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், இங்கு பயிலும் எங்கள் பிள்ளைகளை நாங்கள் திரும்ப அழைத்து செல்வதாகவும் கூறுகின்றனர்.