கோயம்புத்தூரில் ‘நான் உயிர் காவலன்’ விழிப்புணர்வு பிரச்சாம்
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உயிர் (UYIR) ஆகியவை இணைந்து, கோயம்புத்தூரின் மிகப்பெரிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரமான ‘நான் உயிர் காவலன்’ -ஐ துவக்கின்
இந்த பிரச்சாரத்தையும் அதன் அதிகாரப்பூர்வ இலச்சினையை கோவை மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர் அறிமுகம் செய்தார். அவருடன் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், உயிர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர். எஸ். ராஜசேகரன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் உயிர் அறக்கட்டளையின் அறங்காவலர் எஸ். மலர்விழி மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக, கோயம்புத்தூரில் சாலை விபத்துக்களை குறைக்கும் நோக்கில், உயிர் அறக்கட்டளை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல்துறையுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதில் பேரணிகள், போட்டிகள், கருத்தரங்குகள், மற்றும் பள்ளி மாணவர்களுக்கான ‘உயிர் குட்டி காவலர்’ போன்ற பல முயற்சிகள் அடங்கும். உயிர் மன்றங்கள் (Uyir Clubs) மூலம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சமூகத்தில் சாலைப் பாதுகாப்பு தூதுவர்களாக செயல்பட ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அறிமுகம் செய்யப்பட்ட ‘நான் உயிர் காவலன்’ என்ற பிரச்சாரம், கோயம்புத்தூர் முழுவதும் மிகஅதிக அளவிலான மக்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை எடுத்துச்செல்ல வேண்டும் என்ற இலக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் 10 லட்சம் பேர் பங்கேற்று, சாலைப் பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்று, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி, உயிர்களைக் காப்போம் என உறுதியளிக்கும் படி திட்டமிடப்பட்டுள்ளது.
இதே போல அக்டோபர் முதல் வாரத்தில், கோயம்புத்தூரில் விபத்தில்லா வாரம் ஒன்றை உருவாக்கும் லட்சியத்துடன், அனைத்து வயதினரிடமும் இதை கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த உன்னத நோக்கில், அரசு அதிகாரிகள், காவல்துறை, கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை சங்கங்கள், சமூக நல அமைப்புகள் என அனைவரும் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம், கோயம்புத்தூரை சாலைப் பாதுகாப்பிற்கு ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றுவதே இவர்களின் இலக்கு ஆகும்.