பா. வடிவேல், அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் காவல்துறையினருக்காக சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி அவர்களின் உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ரவிச்சக்கரவர்த்தி தலைமையில், ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல்துறை மற்றும் கும்பகோணம் மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை இணைந்து இம்முகாமை ஏற்பாடு செய்திருந்தது.
முகாம் ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தவர் ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ரவிச்சக்கரவர்த்தி ஆவார். அவருடன் ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் (சட்டம் ஒழுங்கு) மற்றும் ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
காவல்துறையினரும், அவர்களது குடும்பத்தினரும் இந்த முகாமில் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனர். அனைவரும் சிரமமின்றி பரிசோதனை மேற்கொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும், கண் பரிசோதனையின் போது தேவைப்படும் நபர்களுக்கு அடுத்தடுத்த நாட்களிலும் கும்பகோணம் மேக்ஸி விஷன் மருத்துவமனையில் தொடர்ச்சியான இலவச கண் சிகிச்சை வழங்கப்படும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த முகாம் காவல்துறையினரின் உடல் நல பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.