துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் 31 பேர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.நேற்று (28/09/2025) மதியம் 2: 30 மணி அளவில் துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து பெரம்பலூர் நோக்கி அரசு பேருந்து சென்றது.இந்தப் பேருந்தை பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரை சேர்ந்த அண்ணாதுரை (49) ஓட்டியுள்ளார்.
இதில் பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சுரேஷ் (51) நடத்துனுராக இருந்துள்ளார்.இந்த பேருந்து கிழக்குவாடி அருகே குன்னுப்பட்டி திரும்பும் சாலையில் திடீரென முன்னே சென்ற மாருதி கார் திரும்பியதால் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் முத்தையன், உதவி காவல் ஆய்வாளர் தினேஷ் உள்ளிட்ட காவல் துறையினர் மீட்பு பணிகளை முடுக்கி விட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.இந்த பேருந்து விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர்,நடத்துனர் உள்பட ஆண்கள் 16 பேர்,பெண்கள் 11 பேர்,குழந்தைகள் 04 பேர் என 31 பேர்கள் காயம் அடைந்துள்ளனர்.
இதில் சுமார் 15 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.விபத்துக்குள்ளான பேருந்தின் உட்புறம் இருக்கைகள் அனைத்தும் உடைந்து சிதறி கிடந்தன.
மாருதி காரை ஓட்டி வந்த சுந்தரம் (61) என்பவரும் காரில் இருந்தவரும் காயம் இன்றி தப்பினர்.இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த எம்எல்ஏ ஸ்டாலின் குமார்,முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், மேலாளர் ஜெய்சந்திரன், தொமுச தலைவர் சுப்பையா,ஒன்றிய செயலாளர்கள் வீரபத்திரன்,அண்ணாதுரை, கஸ்டம்ஸ் மகாலிங்கம், தர்மன் விஜய்,வினோத் மற்றும் பலர் விபத்து சிக்கியவர்களை நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்து,டாக்டரிடம் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
சம்பவ இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் மேற்படி இடத்தில் சென்டர் மீடியன் கட்டி தர வேண்டி ஊர் பொதுமக்கள் சுமார் 30 நபர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் முத்தையன் பேச்சு வார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.இதனால் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் காணப்பட்டது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்