மதுரை மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா கொண்டாடப் பட்டது. நாடு முழுவதும் அக்டோபர் முதல் வாரம் வன உயிர்களை காத்து அதன் வாழ்வை மேம்படுத்தும் நோக்கோடு ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 2025ம் ஆண்டிற்கு மனித – விலங்கு இயைந்து வாழுதல் என்ற கருப்பொருளுடன் கடந்த ஒரு வாரமாக கொண்டாடப்பட்ட வன உயிரின வார விழாவில் பல்வேறு நிகழ்வுகள் மாவட்ட வன அலுவலர் ரெவிட்டி ராமன், வனச்சரக அலுவலர்கள் வெனிஷ், சாருமதி, அன்னகொடி, தீனதயாளன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
குட்லாடம்பட்டி அருவி மற்றும் உசிலம்பட்டி பகுதியில் உள்ள போத்தம்பட்டி கண்மாயில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள் 100க்கும் மேற்பட்ட பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஊர் மக்களுடன் இணைந்து அகற்றப்பட்டு, உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் பேரணி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
சாமநத்தம் கண்மாய் மற்றும் இடையப்பட்டி வெள்ளிமலை பல்லுயிர் பாரம்பரிய தலத்தில் 100க்கும் மேற்பட்ட இடையப்பட்டி தேசிய மாணவர் படை மாணவர் கள் மற்றும் தன்னார் வலர்களுடன் இணைந்து இயற்கை பயணம், மதுரையின் மரமான கடம்ப நாற்று நடுதல், வன உயிர்களை காக்க மாணவர்களால் மனித சங்கிலி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. இணைய வழி மூலமாக மதுரை மாவட்ட அளவில் பள்ளி மாணவர் களுக்கு மனித – விலங்கு இயைந்து வாழுதல், என்ற தலைப்பில் ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப் பட்டது.
இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர் களுக்கு வன உயிரின வார இறுதி நாளன்று மதுரை மாவட்ட வன அலுவலர் ரெவிட்டி ராமன் தலைமையில் நடைபெற்ற விழாவில் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.