பெரம்பலூர் மாவட்டம், கீழப்பெரம்பலூர் கிராமத்தைச்சேர்ந்த முதியவர் சின்னதுரை என்பவர் கடந்த 13.10.2025 அன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் தனது மகளின் குழந்தைக்கு ஒரு வயது ஆவதாகவும், அந்த குழந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் சேர்த்தபோது, பரிசோதனையில் குழந்தையின் இதயத்தில் ஓட்டை இருப்பதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குடும்ப வறுமை காரணமாக நிறைய செலவு செய்து அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு வசதி இல்லை என்றும், எனவே தனது பேத்திக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவியாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கி உதவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த மனுவை பரிசீலித்த மாவட்ட ஆட்சித்தலைவர், உடனடியாக மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்க உத்தரவிட்டார். ஆனால், அந்த குழந்தையின் பெற்றோருக்கு குடும்ப அட்டை இல்லாததால் அவருக்கு முதலமைச்சரின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்க இயலாத நிலையினை அலுவலர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் விளக்கினார்கள்.
குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தவர்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே குடும்ப அட்டைகள் வழங்கப்படும் நடைமுறை இருந்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் சிறப்பு உத்தரவின் அடிப்படையில், இதயப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு ஒரே நாளில் மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டது. அதனை வைத்து, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டையும் உடனடியாக தயார் செய்யப்பட்டது.
இந்நிலையில், தனது பேத்தியின் மருத்துவ சிகிச்சைக்காக உதவி கேட்டு மனு கொடுத்த முதியவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர் , அவரிடம் புதிய மின்னணு குடும்ப அட்டை மற்றும் முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டு அட்டையினையும் வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் , குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள், குழந்தைகயின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்யும். கவலைப்படாதீங்க என முதியவருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தனது கோரிக்கை ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டதை சற்றும் எதிர்பார்க்காத அந்த முதியவர், கண்ணீர்மல்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். விரைவாக நடவடிக்கை எடுத்து குடும்ப அட்டை வழங்கிய மாவட்ட வழங்கல் அலுவலரையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கிய மாவட்ட ஒருங்கிணைப்பாளரையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மனதாரப் பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்