பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அரும்பாவூரில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரும்பாவூர் பெரிய ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடந்த முறை பெய்த மழையில் அரும்பாவூர் பெரிய ஏரியின் கரை உடைப்பு ஏற்பட்டதால், தற்போது பருவமழை காலத்திற்கு முன்பே கரைகளை முறையாக பலப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரும்பாவூர் பெரிய ஏரியின் மூலம் 563.33 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றது. இந்த ஏரியின் கொள்ளளவு 52.63 மில்லியன் கன அடியாகும். கரையின் நீளம் 3,250 மீட்டர், 3 பாசன மதகுகளைக் கொண்ட ஏரியாகும். இந்த ஏரியின் நீர்தேங்கும் பரப்பு 220.40 ஏக்கர் ஆகும். அதிகபட்சம் நீர்தேங்கும் உயரம் 3.75 மீட்டர் ஆகும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மழை பெய்து வருவதாலும், அரும்பாவூர் பெரிய ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான பச்சைமலை அடிவாரத்தில் கனமழை பெய்து வருவதாலும் மழைநீரானது உடனடியாக ஏரிக்கு சென்று முழு கொள்ளளவை எட்டுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சித்தலைவர் அரும்பாவூர் பெரிய ஏரியினை பார்வையிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஏரிகளையும் தொடர்ந்து கண்காணித்து, மதகுகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்கவும், கரைகளை பலப்படுத்தவும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
மேலும், கரையோரம் உள்ள மக்கள் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது செல்பி எடுத்தல், குளித்தல், கால்நடைகளை குளிப்பாட்ட செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடாத வகையில் அவர்களுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
முன்னதாக, துறைமங்கலம் பெரிய ஏரியின் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வுகளில், நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாண்டியன், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் பார்த்திபன், வேப்பந்தட்டை வட்டாட்சியர் துரைராஜ் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.