திருவாரூர்., மார்ச்.17
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் பறக்கும் படை, நிலையான சோதனை குழு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல்வேறு இடங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி திருவாரூர் மாவட்டம் முழுவதும் 36 தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுக்கள் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று காலை திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கிளறியம் கோட்டகம் பகுதியில், தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு எண்- 7 அதிகாரிகள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சைமுத்து தலைமையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுக்காவிற்குட்பட்ட களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 54 வயது ரவிராஜன் என்பவர், நீடாமங்கலம் பகுதியில் இருந்து கொரடாச்சேரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்ட தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள், அவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் ஒரு லட்சத்து 59 ரூபாய் இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்திருந்ததை கைப்பற்றி, திருவாரூர் தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான சத்யாவிடம் அதனை ஒப்படைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் வட்டாட்சியரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான இளங்கோவன் மற்றும் ராமச்சந்திரன், தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.