ஜனநாயகத்தின் முக்கிய திருவிழாவான தேர்தல் நன்னேரத்தில், வாக்காளர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் உரிமையை இழக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த கலைஞர் யு.எம்.டி. ராஜா ஒரு தனித்துவமான விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்துள்ளார்.
வாக்களிப்பது என்பது ஒரு குடிமகனின் ஐந்து கால உரிமையாகும். ஆனால், ஒரு சில நூறு ரூபாய்களுக்காக அந்த உரிமையை விற்பது என்பது, தன்னைத் தானே ஒரு சிலந்தி வலையில் சிக்க வைத்துக்கொள்வதற்குச் சமம் என்பதை இந்த ஓவியம் தத்ரூபமாகச் சித்தரிக்கிறது. ஒரு வெள்ளைத் தாளில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியத்தில், பிரம்மாண்டமான சிலந்தி வலைக்குள் ஒரு மனிதன் கயிற்றால் கட்டப்பட்டு சிக்கியிருப்பது போன்ற காட்சி, பணத்திற்காக வாக்கினை விற்பவர்களின் அவல நிலையை மிகத் தெளிவாகக் காட்டுகிறது.
”தேர்தல் நேரத்தில் கிடைக்கும் தற்காலிகப் பணத்தின் மீது ஆசைப்பட்டு, நம்முடைய மற்றும் நம் எதிர்கால சந்ததியினரின் நலனை அடகு வைக்க வேண்டாம்; சிலந்தி வலையில் சிக்காதே, ஓட்டுக்கு பணம் வாங்காதே, உன்னுடைய உரிமையை விட்டுக் கொடுக்காதே” என்ற ஆழமான கருத்தை இக்கலைப்படைப்பு பொதுமக்களிடையே கொண்டு செல்கிறது. சமூக அக்கறையுடன் வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.