திருவாரூர்., ஏப்ரல். 22
தமிழ்நாடு முழுவதும் நாளை காலை 7மணி முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சீல் வைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள, வாக்குப்பதிவு கருவிகளை எடுத்துச் செல்வதற்காக இன்று திருவாரூர் கோட்டாட்சியர் சத்யா தலைமையில் பாதுகாப்பு அறை சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
தொடர்ந்து வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள வாக்கு பதிவு கருவிகள், கட்டுப்பாட்டு கருவிகள், மற்றும் விவி பேட், வாக்களிப்பதற்காக பயன்படுத்தப்படும் மறைவுக்கான தடுப்பு அட்டைகளும், வாக்களிப்பதற்கான அடையாள மைகள் அடங்கிய பெட்டிகள் ஆகியவை சரியாக இருக்கிறதா என கணக்கெடுத்த பின் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் திருவாரூர் மாவட்ட ஆட்சியருமான மோகனச்சந்திரன் முன்னிலையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துவங்கியது.
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகளை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் உள்ள 1,271 வாக்குச்சாவடி மையங்களில் 2,542 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலகம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில், திருத்துறைப்பூண்டியில் 7 வாக்குச்சாவடிகள், திருவாரூரில் 14 வாக்கு சாவடிகள், மன்னார்குடியில் 20 வாக்குச்சாவடிகள், நன்னிலத்தில் 13 வாக்கு சாவடிகள் என மொத்தம் 54 வாக்கு சாவடிகள் பதற்றமானதாக அறிவிக்கப்பட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மோகன் சந்திரன் தெரிவித்தார்.
முன்னதாக வாக்கு சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுவதை நேரில் ஆய்வு செய்த திருவாரூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவாரூர் மாவட்ட ஆட்சியருமான மோகனசந்திரன் அதனை தனது செல்போனில் பதிவு செய்து குறித்து கொண்டார்.