ஹாஜி முகமது ரபிக் வாக்களித்து முன்மாதிரி – கோவையில் அமைதியாக தொடங்கிய சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு
கோவை சாய்பாபா காலனியில் இன்று காலை 7 மணிக்கு தனது வாக்கினை பதிவு செய்த தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஹாஜி முகமது ரபிக், ஜனநாயகக் கடமையை முதன்மையாக நிறைவேற்றி பொதுமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026ற்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 27,44,472 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 13,22,759 ஆண்கள், 14,21,179 பெண்கள் மற்றும் 534 இதர வாக்காளர்கள் அடங்குகின்றனர்.
வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க 3,540 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் மாதிரி வாக்குச்சாவடி, பெண்கள் முழுமையாக நிர்வகிக்கும் வாக்குச்சாவடி மற்றும் இளைஞர்கள் நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 182 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டு, அங்கு மத்திய பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவை கண்காணிக்க வெப் கேமராக்கள் மூலம் இணையவழி நேரலை வசதி செய்யப்பட்டுள்ளதுடன், 70 வாக்குச்சாவடிகளில் வீடியோ கண்காணிப்பும் நுண்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பணிகளில் 16,992 வாக்குப்பதிவு அலுவலர்கள், 165 நுண்பார்வையாளர்கள் மற்றும் 6,240 காவல்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்களிக்க இலவச வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்காக மொத்தம் 39 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு அமைதியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தேர்தல் ஏற்பாடுகளை சிறப்பாக செய்த தேர்தல் அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஹாஜி முகமது ரஃபிக் தெரிவித்தார்