கடலூர் மாவட்டம், வடலூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வடலூர் அடுத்துள்ள கருங்குழி, கிராமப் பகுதிகளில் கடந்த பல மாதங்களாக குறைந்த மின்னழுத்தம் பிரச்சனை காரணமாக ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோக மின்சாதனங்கள் பயன்படுத்த முடியவில்லையாம். மேலும், சில மின்சாதனங்கள் பழுதாகிவிட்டதாம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு, குறைந்த மின்னழுத்தம் காரணமாக குடிநீர் வழங்கும் மோட்டார்கள் வேலை செய்யவில்லையாம். இதனால், மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிகளில் குடிநீர் ஏற்ற முடியாத காரணத்தினால் வீடுகளுக்கான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
கருங்குழி காலனி புதிய தொகுப்பு வீட்டு பகுதிகளிலும், கடந்த ஒரு வாரகாலமாக குடிநீர் தட்டுப்பாடு நீடித்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், கருங்குழி, வடலூர்பார்வதிபுரம் செல்லும் வழியில் இருந்த மின் மாற்றி திடீரென பழுதானதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து, கிராம மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி கருங்குழி கடை வீதி அருகே சாலையில் அமர்ந்து செவ்வாய்க்கிழமை காலை11 மணி அளவில்
மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து கிராம மக்கள் அனைவரும் கலைந்துச் சென்றனர்.