கோவை விஜிஎம் மருத்துவமனை சார்பில் “விஜிஎம் டிஸ்பெப்சியா சென்டர்” திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நீண்டகால மேல்குடல் அறிகுறிகள், குறிப்பாக ஜீரணக்குறைபாடு தொடர்பான நோய்களை அறிவியல் அடிப்படையில் துல்லியமாக மதிப்பீடு செய்து சிகிச்சையளிக்கும் புதிய முன்னேற்றமாக இந்த சென்டர் அமைந்துள்ளது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மேற்கு ஆஸ்திரேலியா அரசின் முன்னாள் அமைச்சர், அலனாஹ் மெக் டியர்னன் ; ஆஸ்திரேலியா அரசின் சட்டத்துறை தலைமை வழக்கறிஞரின் உதவி அமைச்சர் யாஸ் முபாரகாய் ; ஆஸ்திரேலியாவின் ரிவர்டன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெகதீஷ் கிருஷ்ணன் பங்கேற்றனர்.

டிஸ்பெப்சியா சென்டர் குறித்து மூத்த குடலியல் நிபுணர், கல்லீரல் நிபுணர் மற்றும் எண்டோஸ்கோப்பி நிபுணர், விஜிஎம் மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் கூறுகையில்,

ஜீரணக்குறைபாடு உலகளவில் 20 முதல் 30 சதவீத மக்களை பாதிக்கும் பொதுவான உடல்நலப் பிரச்சினையாகும். இதில் சுமார் 20 சதவீத நோயாளிகளில் மட்டுமே தெளிவான காரணம் கண்டறியப்படுகிறது. மீதமுள்ள பெரும்பாலானவர்களுக்கு காரணம் தெரியாத ஜீரணக்குறைபாடு என வகைப்படுத்தப்படுகிறது. இத்தகைய நோயாளிகள் பெரும்பாலும் முழுமையான ஆய்வுகள் இல்லாமல் பொதுவான சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படுவது வழக்கமாக உள்ளது.

விஜிஎம் மருத்துவமனையில் 2022 முதல் 2024 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 839 காரணம் தெரியாத ஜீரணக்குறைபாடு நோயாளிகள் பதிவு செய்யப்பட்டனர். இதில் 55 சதவீதம் ஆண்கள் ஆகும். இவர்களில் 52 சதவீத பேருக்கு ஹெலிகோபாக்டர் பைலோரி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மீதமுள்ள நோயாளிகளில் மூச்சுப் பரிசோதனைகள் மற்றும் எலக்ட்ரோகாஸ்ட்ரோகிராஃபி போன்ற மேம்பட்ட பரிசோதனைகள் மூலம் பல்வேறு காரணங்கள் கண்டறியப்பட்டன.

பொதுவாக நீடித்த ஜீரணக்குறைபாடு அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு எண்டோஸ்கோப்பி மற்றும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அவை சாதாரணமாக இருந்தால், காரணம் தெரியாத நிலை என கருதி பொதுவான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த அணுகுமுறையை மாற்றும் வகையில், விஜிஎம் டிஸ்பெப்சியா சென்டர் காரண அடிப்படையிலான துல்லியமான நோயறிதல் முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மையத்தில் ஹெலிகோபாக்டர் பைலோரி தொற்றை கண்டறிய கதிர்வீச்சு இல்லாத மூச்சுப் பரிசோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கார்போஹைட்ரேட் உணவுகளை ஜீரணிக்க முடியாத நிலை, சிறுகுடல் பாக்டீரியா அதிகரிப்பு, வயிற்றின் இயக்கக் குறைபாடு போன்ற பல மறைந்த காரணங்களை கண்டறிய நவீன பரிசோதனை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, குடல் மைக்ரோபையோம் ஆய்வு மற்றும் தனிப்பட்ட உணவு முறைகள் மூலம் நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள் வடிவமைக்கப்படுகின்றன.

மேலும் அவர் பேசுகையில், எதிர்காலத்தில் ஜீரணக்குறைபாடு போன்ற செயல்பாட்டு குடல் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அறிகுறிகளை மட்டுமே கவனிப்பது போதுமானதல்ல; அதன் அடிப்படை காரணங்களை கண்டறிவதே முக்கியம் என வலியுறுத்தினர்.

பொதுமக்கள் மேல்பகுதி வயிற்று அசௌகரியம், வயிறு வீக்கம், விரைவில் பசியாறுதல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை சாதாரண காஸ்ட்ரிடிஸ் என கருதி புறக்கணிக்காமல், துல்லியமான பரிசோதனைகள் மூலம் சரியான சிகிச்சை பெற வேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலேசியா நியூரோ மோட்டிலிட்டி சங்க மாநாடு மற்றும் இந்திய நியூரோ மோட்டிலிட்டி சங்க மாநாடு கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.

வி.ஜி.எம். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ராதா பிரசாத், எண்டோஸ்கோபி இயக்குனர்கள் டாக்டர் மதுரா பிரசாத், டாக்டர் வம்சி மூர்த்தி; மருத்துவ இயக்குனர் டாக்டர் சுமன்; கல்லீரல் நிபுணர் டாக்டர் மித்ரா பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உலகளாவிய வழிகாட்டுதல்களை பின்பற்றும் நவீன நோயறிதல் மற்றும் சிகிச்சை முறைகளை ஒருங்கிணைத்து, விஜிஎம் டிஸ்பெப்சியா மையம் இந்தப் பிராந்தியத்தில் சர்வதேச தரத்திலான குடலியல் சேவையை வழங்கி, நீண்டகாலமாக பூர்த்தியாகாத மருத்துவ தேவைகளை நிறைவேற்றும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *