தூத்துக்குடி சிவன்கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பொியசாமி வடம் பிடித்து தொடங்கி வைத்தனா்.
தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சிறப்புப் பூஜைகள், சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக காலை 7 மணிக்கு அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் மற்றும் விநாயகர் – முருகப் பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. அதன் பின்பு சிறிய தேரில் விநாயகரும் முருகப் பெருமானும், பெரிய தேரில் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடன் அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரரும் எளுந்தருளினர்.
தொடர்ந்து காலை 10.36மணி அளவில் கீழரத வீதியில் இருந்து தொடங்கிய தேரோட்டத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அதிமுக முன்னாள் அமைச்சரும் வேட்பாளருமான சி.த.செல்லப்பாண்டியன், அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட செயலாளர் ஏசாதுரை, ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்
தேருக்கு முன்பாக மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மரக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரை, ராஜமேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், தப்பாட்டம், சிவகைலாய சிவபூதகண வாத்தியங்களுடன், மகளிர் கோலாட்டம் மற்றும் தேவார இன்னிசையுடன் வேதபாராயணம் பாட, சிலம்பாட்டம் வானவேடிக்கையுடன் மாணவ, மாணவியரின் வீர விளையாட்டுகளுடன் நடைபெற்றது.