மே தினத்தை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த யூஎம்டி ராஜா, தனித்துவமான கலைப்பணியின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஒரு சாதாரண குண்டு பல்பின் உள்பகுதியில் வெறும் இரண்டு கிராம் தங்கத்தை பயன்படுத்தி உழைப்பாளர்களின் சிலையை நுணுக்கமாக வடிவமைத்து, அதனை பல்பின் உள்ளே உள்ள இலை மீது பொருத்தியுள்ளார்.
இந்த சிற்பத்தின் மேல்பகுதியில் “மே 1” என்பதை குறிக்கும் வகையில் சிறிய வடிவிலான சிற்பமும் இடம் பெற்றுள்ளது. மேலும், பல்பின் கீழ்பகுதியில் “நாடு ஒளிர நாளும் உழைப்போம்” என்ற உற்சாகமான வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. மிகச் சிறிய பரப்பளவில் கூட மிகுந்த கவனம், பொறுமை மற்றும் திறமையை வெளிப்படுத்தும் இந்த கலைப்பணி, மே தினத்தின் முக்கியத்துவத்தையும் உழைப்பாளர்களின் பெருமையையும் வெளிப்படுத்துகிறது.
இது குறித்து யூஎம்டி ராஜா கூறுகையில், “பல்பின் உள்பகுதியில் உழைப்பாளர்கள் பல்பின் இலையை ஆயுதங்கள் கொண்டு உருவாக்குவது போல சித்தரித்துள்ளேன். இந்த சிற்பத்தை முழுமையாக உருவாக்க ஒரு நாள் நேரம் எடுத்துக் கொண்டு, மிகுந்த நுணுக்கத்துடன் செய்தேன். உழைப்பாளர்களின் அர்ப்பணிப்பை இந்த சிற்பம் மூலம் காட்ட வேண்டும் என்பதே என் நோக்கம்” என்றார்.
மே தினத்தை முன்னிட்டு உருவாக்கப்பட்ட இந்த புதுமையான கலைப்பணி, சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடமும் பாராட்டைப் பெற்று வருகிறது.