நாகை அருகே வலிவலம் இருதய கமலநாத சுவாமி ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சப்ர கட்டுத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் இருதய நோய் தீர்க்கும் பரிகார ஸ்தலமான இருதய கமலநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வித வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட சப்ர கட்டுத்தேரில் சோமஸ்கந்தர் உடனுறை அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துணை ஆணையர் இராணி மற்றும் கோயில் செயல் அலுவலர் து.கார்த்திகேயன் மற்றும் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க நான்கு வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. ஆரூரா தியாகேசா என பக்தி பரவசத்தோடு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளை மே.1 இரவு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.