கோவை
ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக மூலப்பொருட்கள் விலையேற்றமடைந்து ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பருத்தியின் மீதான 11 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று கோவை ஜவுளித்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் கெர்சி பருத்தி ஆலோசனை கமிட்டி, இந்திய பருத்தி விளைச்சல், விலை மற்றும் வியாபார கொள்கைகள் தொடர்பான ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, ஜவுளித்துறையை மேம்படுத்த முக்கிய திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைக் கழகத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது இந்திய ஜவுளித்துறை சம்மேளனத்தின் தலைவர் அஸ்வின் சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் எவ்வளவு பருத்தி விளைச்சல் இருந்தது? என்ன தேவை உள்ளது? இந்திய ஜவுளித்துறை உலக சந்தைகளுடன் போட்டியிடுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்து இந்த ஆய்வறிக்கை விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, பருத்தி மீதான இறக்குமதி வரி 11 சதவீதத்தை முழுமையாக நீக்குதல், அரசு சார்பில் பருத்தியை சேமித்து விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் முக்கியமானதாக இறக்குமதி வரியை நீக்குவது அமைந்துள்ளது. ஏனென்றால் இந்தியாவில் சுமார் 36 லட்சம் பருத்தி பேல்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் இந்திய ஜவுளித்துறை வெளிநாடுகளைச் சார்ந்து இயங்கி வருகிறது. தற்போது ஒரு கேண்டி பருத்தி விலை ரூ.67,000 ஆக உள்ள நிலையில், இதனுடன் வரியை சேர்க்கும் போது அது தொழில் முனைவோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் பருத்தி உற்பத்தி குறைவாக உள்ளதால், இந்த வரியை நீக்கும்போது விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எனவே இவ்வரியை மத்திய அரசு முழுமையாக நீக்க வேண்டும்.
ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக ஏற்கனவே ஜவுளித்துறைக்கான மூலப்பொருட்கள் விலையேற்றம் கண்டுள்ளன. பெட்ரோல், டீசல் விலையேற்றம், கேஸ் தட்டுப்பாடு, எண்ணெய் சார்ந்த மூலப்பொருட்கள் விலை மற்றும் டை, கெமிக்கல் விலை 20 சதவீதம் உயர்வு, பேக்கேஜ் மற்றும் பொருட்களை அனுப்பும் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் ஜவுளித்துறை சிக்கித் தவிக்கிறது.
எனவே எங்களது கோரிக்கையை ஏற்று மத்திய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இதனைச் செய்தால் தொழில் வளம் பெருகுவதோடு, புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.