திருவாரூர் செய்தியாளர் V, செந்தில் குமார்
திருவாரூர், மே.14- தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தியுள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர்(பொ) ரெ.ஈவேரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு வழங்குகின்ற போதெல்லாம் தமிழ்நாடு அரசும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி வந்துள்ளது.
அந்த வகையில் மத்திய அரசு இரண்டு சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு சில தினங்களிலேயே தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை இரண்டு சதவீதம் உயர்த்தி 60 சதவீதமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுவதற்கு முன்னரே பணிகளை தொடங்கி அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுபோல் ஆசிரியர்கள் அரசு அலுவலர்களின் மற்ற கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்றி தர வேண்டும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.