காங்கயம்,
காங்கயம் அருகே, குடிநீர் தட்டுப்பாட்டால் வியாழக்கிழமை பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கயம் அருகே, சென்னிமலை சாலை, ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட கல்லேரியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு, வரப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, மேல்நிலைத் தண்ணீர் தொட்டியில் நிரப்பி, குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், குடிநீர்க் குழாய்கள் பழுதானதால் கடந்த 3 மாத காலமாக அங்கிருந்து தண்ணீர் எடுக்க முடியாத சூழ்நிலை உருவானது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் வந்து, காங்கயம்-சென்னிமலை சாலையில், ஊராட்சி அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த காங்கயம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேவிபாலா, காங்கயம் காவல் ஆய்வாளர் அருண் உள்ளிட்ட அலுவலர்கள் விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில், பழுதடைந்த குழாய்கள் சரி செய்யப்பட்டு, உடனடியாக தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததையடுத்து, மறியலைக் கைவிட்டு, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.