மத்திய அரசு அண்மையில் அனறிவித்துள்ள 3 ரூபாய் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு டிப்பர் லாரி சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வால் தமிழ்நாட்டில் டிப்பர் லாரி தொழிலை நம்பி இருக்கக்கூடிய 15 லட்சம் கூலி தொழிலாளிகள் பாதிப்படைவார்கள் இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என்று டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்

இதுகுறித்து அச்சம்மேளனத்தின் தலைவர் ரவிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்

இந்த விலை உயர்வால் பால், எண்ணெய், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும், எம்-சாண்ட், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்களின் விலையும் பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

சர்வதேச சந்தையில் கடந்த நான்கு ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டிய பல லட்சம் கோடி ரூபாய் லாபத்தை மக்களுக்கு சலுகையாக வழங்கத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய வளைகுடா போர்ச் சூழலைக் காரணம் காட்டி விலையை உயர்த்துவதை ஏற்க முடியாது என்றார். எண்ணெய் நிறுவனங்களின் இந்த சர்வாதிகாரப் போக்கை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், ‘அகில இந்திய மோட்டார் காங்கிரஸ்’ (AIMC) அமைப்பினருடன் இணைந்து நாடு தழுவிய அளவில் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கு கோரிக்கை விடுத்த அவர், வெறும் அறிக்கைகளுடன் நின்றுவிடாமல், தமிழக அரசு தனது வரியைக் குறைத்து இந்த சுமையை ஏழை மக்கள் மீதும், லாரி உரிமையாளர்கள் மீதும் சுமத்தாமல் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் லாரி தொழிலை மட்டுமே நம்பி சுமார் 50 லட்சம் குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் அனைவரும் தற்போதைய முதலமைச்சருக்குத்தான் வாக்களித்துள்ளனர் என்பதையும் நினைவுகூர்ந்த அவர், முதலமைச்சர் உடனடியாகப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை நேரிடையாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு, இந்த விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு டிப்பர் லாரி சம்மேளனம் சார்பாக வலியுறுத்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *