கோவை
தமிழகத்தில் 717 மதுபான கடைகள் மூடல்,முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கலை ஓவியம் – கோவையில் முயற்சி
கோவை: தமிழகத்தில் 717 மதுபான (டாஸ்மாக்) கடைகளை மூட உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த இளைஞர் யூ.எம்.டி. ராஜா தனித்துவமான ஓவியத்தை வரைந்து கவனம் ஈர்த்துள்ளார்.
கோவில் மற்றும் பள்ளிக்கூடங்கள் அருகில் செயல்பட்டு வந்த மதுபான கடைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், இந்த ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது. மது பாட்டிலுக்குள் மதுக்கடை மூடப்பட்டதை குறிக்கும் விதமாக, வளைந்த தூரிகை (பிரஷ்) பயன்படுத்தி பச்சை, சிவப்பு, நீலம், வெள்ளை உள்ளிட்ட நிறங்களால் கலைநயமுடன் வடிவமைத்துள்ளார்.
மேலும், “717 டாஸ்மாக் மூடல்” என்ற வாசகத்தையும் ஓவியத்தில் பதிவு செய்துள்ளதுடன், அதன் கீழ் ஒரு குடும்பம் இரு கைகளையும் கூப்பி முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது போன்ற காட்சியையும் அவர் வரைந்துள்ளார். இந்த ஓவியத்தை முழுமையாக உருவாக்க 12 மணி நேரம் எடுத்ததாக யூ.எம்.டி. ராஜா தெரிவித்துள்ளார்.
சமூக நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருவதையும், தனது ஓவியத்தின் மூலம் அதனை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.