அரியலூர், மே 24:
இளைஞர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் நோக்கில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளருமான க. வைத்தி, தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்கும் அரியலூர் மாவட்ட வீரர்களுக்கு நிதி உதவி வழங்கி பாராட்டி ஊக்கமளித்தார்.

ஒடிசா மாநிலத்தில் வருகிற மே 28ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ள தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து திறமையான விளையாட்டு வீரர்கள் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ள உள்ளனர்.

போட்டியில் பங்கேற்க தேவையான பயணச் செலவு, தங்கும் வசதி மற்றும் போட்டி சார்ந்த செலவுகளுக்காக நிதி உதவி வழங்குமாறு வீரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க. வைத்தியிடம் கோரிக்கை விடுத்தனர்.

வீரர்களின் திறமையையும், அவர்களின் எதிர்கால கனவுகளையும் புரிந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் வைத்தி, உடனடியாக மனிதநேயத்துடனும் விளையாட்டு மேம்பாட்டிற்கான அக்கறையுடனும் செயல்பட்டு, போட்டியில் பங்கேற்கும் ஐந்து வீரர்களுக்கும் தலா ரூ.5,000 வீதம் மொத்தம் ரூ.25,000 நிதி உதவியை வழங்கினார்.

இந்த நிகழ்வில் பேசிய அவர், “கிராமப்புறங்களில் இருந்து வரும் இளைஞர்களிடம் அளவிட முடியாத திறமைகள் உள்ளன. சரியான வாய்ப்பும் ஊக்கமும் கிடைத்தால் அவர்கள் தேசிய, சர்வதேச அளவில் சாதித்து தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பார்கள். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் முன்னேற வேண்டும் என்பதே எனது விருப்பம்” எனத் தெரிவித்தார்.

நிதி உதவி பெற்றுக் கொண்ட விளையாட்டு வீரர்கள், “எங்களது திறமையை நம்பி ஊக்கமளித்த சட்டமன்ற உறுப்பினர் வைத்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. தேசிய போட்டியில் சிறப்பாக விளையாடி அரியலூர் மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்போம்” என்று உறுதியளித்தனர்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் எம்.எல்.ஏ வைத்தி வழங்கிய இந்த உதவி, விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கிராமப்புற இளைஞர்களின் கனவுகளுக்கு துணைநிற்கும் இந்த செயல், சமூக அக்கறை கொண்ட மக்கள் பிரதிநிதியின் சிறந்த முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *