நாகப்பட்டினம்,ஜூன்.7-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் கங்கை மாரியம்மன் கோவிலில் கிராம கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் திருநீலகண்டன், கோவிந்தராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பக்கிரிசாமி, கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நிர்வாகி எழில்மாறன் வரவேற்றார்.
கூட்டத்தில் திருமருகல் ஒன்றியம் குத்தாலம்-நரிமணம் கிராமத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் குத்தாலம் பகுதியில் 1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது அப்பகுதியை சுற்றியுள்ள 188 ஏக்கர் விவசாய விலை நிலங்களை கையகப்படுத்தப்பட்டது.
சுமார் 40 ஆண்டு காலமாக இப்பகுதியில் செயல்பட்டு வரும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம் பல மில்லியன் அளவிற்கு கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் குத்தாலம்,புலவநல்லூர், மண்டகமேடு, அய்யனார் கோவில் தெரு, மத்தியக்குடி, வடக்குத்தாலம் பகுதிகளை சேர்ந்த 6 கிராமங்களை சேர்ந்த 446 குடும்பத்தில் உள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு சிபிசிஎல் நிறுவனம் வழங்கியது போல மறுவாழ்வு மற்றும் மீள்குடி அமர்வு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், பிராவடையான் ஆற்றில் உள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.