பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் மாவட்டத் தலைவர் மருத்துவர் பரமேஸ்வரி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் மண்டல அளவிலான நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு சுப்பிரமணியன், மருது சுப்பிரமணியன், எஸ்.கே. ராஜாராம், முத்துவேல், வழக்கறிஞர்கள் ராஜ்குமார், ஜெயக்குமார் மற்றும் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தின் தொடக்கத்தில் கட்சியின் தற்போதைய அரசியல் நிலவரம், மாவட்ட அளவிலான வளர்ச்சிப் பணிகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கம் மற்றும் வரவிருக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய மாவட்டத் தலைவர் மருத்துவர் பரமேஸ்வரி, “பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஒவ்வொரு நிர்வாகியும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் பாஜகவை மேலும் வலுப்படுத்தி வளர்ச்சிப் பாதைக்கும் முன்னேற்றப் பாதைக்கும் கொண்டு செல்வதே எங்களின் முக்கிய இலக்காகும்” என்று தெரிவித்தார்.

மேலும், கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும், “அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வேறு எந்த இயக்கத்திற்கும் அல்லது அரசியல் கட்சிக்கும் செல்ல மாட்டோம். கட்சியின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு பாடுபடுவோம்” என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த உறுதிமொழி நிகழ்வு கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

கட்சியின் அமைப்பு வலிமையை மேலும் அதிகரிக்கும் வகையில் கிராமம் தோறும், வார்டு தோறும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மண்டலத் தலைவர்கள் பரமசிவம், கலியமூர்த்தி, அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் செல்வமணி, விஜி, வெங்கடேசன், வசந்தி உள்ளிட்ட பலர் பெருந்திரளாக பங்கேற்றனர்.

கூட்டத்தின் நிறைவில் மாவட்ட விவசாய அணி தலைவர் ராம செங்கமுத்து நன்றியுரை வழங்கினார் அவருடைய நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *