திருச்சி மாநகராட்சியின் 41-வது வார்டுக்கு உட்பட்ட திருவரம்பூர், காந்திநகர், செல்வபுரம் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் காந்திநகர், செல்வபுரம் கிளைகள் சார்பில் பொதுமக்களிடம் கையொப்பங்கள் பெற்று, மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
மனுவில், காவேரி குடிநீர் கலங்கலாக வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், தரமான குடிநீர் வழங்கவும், தெருக்களில் வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் பல இடங்களில் பழுதடைந்து, அவற்றில் குடிநீர் நிரப்ப முடியாத நிலை உள்ளதால், அனைத்து தொட்டிகளையும் உடனடியாக பழுதுநீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும், தெருக்களில் உள்ள தெருவிளக்குகள் குறைந்த வெளிச்சத்துடன் எரிவதால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், மாணவர்கள், முதியவர்கள் இரவு நேரங்களில் சிரமம் அடைந்து வருவதாகவும், அவற்றை அதிக வெளிச்சம் தரும் எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மின் விளக்குகள் பல இடங்களில் பழுதடைந்து எரியாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் நிவேதா தலைமையில் மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, மாவட்டத் தலைவர் ராகிலா, மாவட்டப் பொருளாளர் மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி மேயர், கோரிக்கைகள் தொடர்பாக உரிய அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கை எடுத்து, மக்களின் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.