புதுச்சேரி-காரைக்கால்

இந்திய அரசின் இந்தியத் தர நிர்ணய அமைப்பின் (BIS) சென்னை கிளை அலுவலகம், SHINE திட்டத்தின் காரைக்கால் மாவட்டத்தில் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சியை நடத்தியது. பல்வேறு சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 55 பெண்கள் இந்நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்றனர்

இப்பயிற்சியில் குழந்தை ஊட்டச்சத்து, உணவுக் கலப்படத்தை அடையாளம் காணுதல், பாதுகாப்பான சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்துதல், மருத்துவ சானிட்டரி நாப்கின்களின் அவசியம், மின் சாதனங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய தலைப்புகள் குறித்து விரிவான விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மேலும், நுகர்வோர் வாங்கும் பொருட்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் BIS CARE செயலி, ISI தரச்சான்று முத்திரை மற்றும் ஹால்மார்க்கிங் குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மரக்கன்று நடும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. பங்கேற்பாளர்கள் பத்து பேர் கொண்ட ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. எந்தக் குழு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை சிறப்பாகப் பராமரித்து செழிப்பாக வளர்க்கிறதோ, அந்தக் குழுவிற்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என வட்டார வளர்ச்சி அதிகாரி அறிவித்தார். இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்ற பெண்கள், மரக்கன்றுகளைப் பாதுகாத்து வளர்ப்பதில் உறுதிபூண்டனர்

இந்நிகழ்ச்சியில் விரிவாக்க அலுவலர் யூஜின் கென்னடி, மாவட்ட மேலாளர் திருமதி சன்மதி, மகளிர் சங்கப் பணியாளர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்

நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பின் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாநிலத் தலைவரும், வழக்கறிஞரும், நோட்டரியுமான எஸ். திருமுருகன், அன்னை தெரசா செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜெ. ஜெயபாரதி மற்றும் டாக்டர் ஜோதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பயனுள்ள கருத்துரைகளையும் விழிப்புணர்வு உரைகளையும் வழங்கினர்

இந்நிகழ்வை, நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளரும், இந்தியத் தர நிர்ணய அமைப்பின் (BIS) பயிற்சி பெறுபவருமான சிவகுமார் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *