எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே மானிய டீசல் வழங்க கோரி பழையாரில் மீனவர்கள் திடீர் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, பழையார் மீனவர் கிராமத்தில் மானிய விலையில் டீசல் வழங்காததை கண்டித்து மீனவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வணிக டீசல் விலை உயர்வால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, 3 முனை சந்திப்பில் மீனவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பழையார் மீனவ கிராமத்தில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
​இப்பகுதி மீனவர்களின் நலனுக்காக தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் டீசல் விற்பனை நிலையம் ஒன்று இயங்கி வருகிறது.

பொதுவாக வெளிச்சந்தையில் மற்ற பங்குகளில் மீனவர்களுக்கு மானிய விலையில் ஒரு லிட்டர் டீசல் 86 ரூபாய்க்கு விற்கப்பட்டு வரும் நிலையில், இங்குள்ள தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக பங்க்கில் வணிக டீசல் ஒரு லிட்டர் 146 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
​ஏற்கனவே டீசல் விலை உயர்வால் தவித்து வந்த மீனவர்களுக்கு, தற்போது மேலும் 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது பேரிடியாக அமைந்துள்ளது.

“60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து நாளை இரவு நாங்க கடலுக்குப் புறப்பட தயாராக இருக்கோம். ஆனா, இந்த மீன் வளர்ச்சி கழக டீசல் பங்க் இப்ப மூடி கிடப்பதாகவும். ஒரு லிட்டர் டீசல் 146 ரூபாய்னு சொன்னா நாங்க எப்படி படகை இயக்க முடியும்? எங்களுக்கு வழக்கமான மானிய விலையில 86 ரூபாய்க்கு டீசல் தரணும். இல்லைன்னா எங்க வாழ்வாதாரமே அழிஞ்சிடும். அரசாங்கம் உடனே தலையிடணும்!”

​ தடைக்காலம் முடிந்து நாளை மறுநாள் கடலுக்குச் செல்ல வேண்டிய சூழலில், டீசல் பங்க் மூடப்பட்டுள்ளதாலும், விலை உயராலும் ஆத்திரமடைந்த மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகளைக் கண்டித்து பழையார் மீன்பிடித் துறைமுகத்தில் முதலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராததால் மீனவர்களின் ஆத்திரம் மேலும் அதிகரித்தது. இதனால், பழையார் மூன்று முனை சந்திப்பு சாலைக்குத் திரண்ட நூற்றுக்கணக்கான மீனவர்கள், சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
​இந்த திடீர் சாலை மறியல் காரணமாக, பழையார் – சீர்காழி இடையே சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, மானிய விலையில் டீசல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இப்பகுதி மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *