கோவை,தடாகம் சாலை சோமையம்பாளையம் பகுதியில் உள்ள மகேஷ்வரி பவனில், மகேஸ்வரி சபா மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

சமூக நல சேவையின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த முகாமில் ஆனைக்கட்டி, கணுவாய், தடாகம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
முகாமில் கண் தொடர்பான பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தேவையானவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

மேலும், பரிசோதனையின் போது அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு சங்கரா கண் மருத்துவமனை சார்பில் இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

முகாமின் துவக்க விழாவில் மகேஸ்வரி சபா தலைவர் ஸ்ரீ கோபால் மகேஷ்வரி, செயலாளர் சந்தோஷ் முந்த்ரா, கமிட்டி உறுப்பினர்கள் பிரதீப் கர்னானி, தாமோதர் சோமனி, கிரிராஜ், அனில், ஓம் பிரகாஷ், மதன் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய மகேஷ்வரி சபா நிர்வாகிகள் , பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி இதுபோன்ற சமூக சேவை மற்றும் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், சமூக நலன் சார்ந்த நிகழ்வுகளுக்காக மகேஷ்வரி பவன் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்த இலவச கண் பரிசோதனை முகாம் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் பயனடைந்ததுடன், கண் நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறும் வாய்ப்பும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *