நாகப்பட்டினம்,ஜூன்.23-
நாகை மாவட்டம் திருமருகலில் ரத்தனகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலுக்கு எதிரே உள்ள தீர்த்த குளத்தில் நீராடி விட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குளத்தில் நுாற்றுக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மீன்கள் அழுகி வருவதால், குளத்தைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றி குளத்தை தூய்மைப்படுத்தி தர வேண்டும் என பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.