நாகப்பட்டினம்,ஜூன்.23-
திருமருகல் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி*
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி ஆதினங்குடி பள்ளிக்கூடத் தெருவில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பள்ளிக்கூடம் தெரு, மேலிருப்பு கீழத்தெரு பகுதிகளில் உள்ள சுமார் 60 குடும்பத்தினருக்கு அன்றாடம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை மட்டுமே அப்பகுதி பொதுமக்கள் குடிக்க மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்யாமல் இருப்பதால் பறவைகள் எச்சம், காக்கை- கழுகு தூக்கி வரும் மாமிச கழிவுகள் தண்ணீரில் கலந்து சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
நடவடிக்கை
இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.