கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும்: பாமக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு!
கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தடையற்ற மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கரூர் மாவட்டச் செயலாளர் கொங்கு பிரேம்நாத் தலைமையில் அக்கட்சியினர் கரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கிய கோரிக்கைகள்:
உடனடி காலிப்பணியிட நிரப்பல்: கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும்.
மன உளைச்சலைத் தவிர்த்தல்: செவிலியர்களை ‘டைவர்சன்’ (Diversion) மற்றும் ‘கன்வர்சன்’ (Conversion) டியூட்டி என்ற பெயரில், பிற மாவட்டங்களுக்கு மாற்றி அலைய விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வரும் செவிலியர்களின் நலனை அரசு பாதுகாக்க வேண்டும்.
உறுதியும் எச்சரிக்கையும்:
மனுவைப் பெற்றுக் கொண்ட கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கரூர் அரசு மருத்துவமனை டீன் (Dean) ஆகியோர், இப்பிரச்சினை குறித்து உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பாமக நிர்வாகிகளிடம் உறுதி அளித்துள்ளனர்.
அதிகாரிகளின் இந்த உறுதியின்படி, செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறினால், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கரூர் மாவட்டத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று கரூர் மாவட்டச் செயலாளர் கொங்கு பிரேம்நாத் தெரிவித்துள்ளார்.