தேனியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா கலந்து கொண்டு, பாரதிராஜாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ் திரையுலகில் கிராமத்து வாழ்க்கையையும், உறவுகளின் உணர்வுகளையும் தத்ரூபமாக படம் பிடித்து தனித்த முத்திரை பதித்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. 16 வயதினிலே, கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகள் இன்றளவும் மக்கள் மனதில் நிலைத்திருக்கின்றன. குறிப்பாக தாய்மாமன் உறவு, அண்ணன்-தம்பி பாசம், தங்கை உறவு போன்ற குடும்ப பிணைப்புகளை மிக அழகாக திரையில் காட்சிப்படுத்தியவர்.
பெண் சிசுக்கொலை போன்ற சமூக அவலங்களுக்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தம்மா திரைப்படத்தை உருவாக்கி தேசிய விருதும் பெற்றார்.
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் பாரதிராஜாவின் காவியப் படைப்புகள் அழியாதவை.
எனவே, இப்படிப்பட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் புகழை போற்றும் வகையில்
தேனியில் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
மேலும், அவரது பெயரில் தேனியில் திரைப்படக் கல்லூரியும் தொடங்க வேண்டும்.
தேனி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பாரதிராஜா, வைரமுத்து கங்கை அமரன், தனுஷ், பாலா, வடிவேலு, சூரி, சசிகுமார் உள்ளிட்ட பல்வேறு திரைப்படக் கலைஞர்கள் இந்த மண்ணுடன் தொடர்புடையவர்கள். இயற்கை எழில் கொஞ்சும் பசுமை நிறைந்த தேனி மாவட்டம் திரைப்படப் படப்பிடிப்புக்கு ஏற்ற பகுதி என்பதால்,
திரைப்பட வளர்ச்சிக்கும் இது பெரிதும் உதவும் மறைந்த பாரதிராஜாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தி மரியாதை செலுத்திய தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் அதே நேரத்தில், பாரதிராஜா பெயரில் திரைப்படக் கல்லூரி மற்றும் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
இதுகுறித்து அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன் இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் டி. ராஜமோகன் ஆடிட்டர் ஜெகதீஷ் உள்ளிட்ட நகரப் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்