இந்திய பாரம்பரியம், கலை மற்றும் கைவினைத் திறன்களை பிரதிபலிக்கும் வகையில், கோவை ஆர்.எஸ்.புரம் கிழக்கு பொன்னுரங்கம் சாலையில் உள்ள கையாரா நிறுவனத்தில் ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற புதிய உயர்தர ஆடைத் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவின் 28 மாநிலங்களின் பாரம்பரிய கலை வடிவங்கள், எம்பிராய்டரி நுட்பங்கள் மற்றும் கலாசார மரபுகளில் இருந்து ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆடைத் தொகுப்பு, பாரம்பரியத்தையும் நவீன ஆடை வடிவமைப்பையும் இணைக்கும் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத்தின் நிறுவனர் ஹர்ஷா வர்தினி, இந்திய கைவினைக் கலைஞர்களின் திறமையையும் நாட்டின் வளமான கலாசார பாரம்பரியத்தையும் உலக அரங்கில் எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஆடைத் தொகுப்பின் அறிமுக நிகழ்ச்சிக்கு ஊடகப் பிரபலமும் கலாசார தூதுவருமான அபர்ணா சுங்கு தலைமை வகித்தார். இதில் ஆடை வடிவமைப்புத் துறையினர், ஊடகப் பிரதிநிதிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் கலாசார ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய கைவினை நுட்பங்கள் மற்றும் நிலைத்தன்மை மிக்க வடிவமைப்புகளை முன்னிறுத்தும் கையாரா நிறுவனம், பெண்களுக்கான பல்வேறு வகையான ஆடைகள் மற்றும் தனிப்பயன் வடிவமைப்பு சேவைகளையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.