கள்ளர் சீரமைப்புத் துறையில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து முறையான ஆய்வு மேற்கொண்டு, அவற்றை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதியில் ஆய்வு பணிக்காக பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை
அமைச்சர் சம்பத்குமார், தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு கள்ளர் மாணவர் விடுதி மற்றும் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார் அப்போது மாணவர் விடுதியில் தங்கி இருந்த மாணவர்களுடன் அமர்ந்து கலந்து ரையாடினார்.
அப்போது அமைச்சர் பேசியதாவது:–
“மாணவர்களின் எதிர்கால நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கல்வியில் முன்னேற வேண்டும்.கல்வியுடன் விளையாட்டுத் துறையிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும்.உங்களை நம்பித்தான் உங்கள் குடும்பங்களும் இருக்கின்றன.
எனவே ஒழுக்கத்துடன் கல்வியில் மேன்மை பெற வேண்டும். தமிழக முதல்வர் விஜய், மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
ஒவ்வொரு மாணவரும் மன உறுதியுடன் இருந்தால் வெற்றி நிச்சயம்,” என்றார்.
இதனைத் தொடர்ந்து, விடுதிக்கான கூடுதல் கட்டிடங்கள் அமைத்து தருமாறு மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:–
“கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகள் மற்றும் மாணவர் விடுதிகளில்
கடந்த 10 ஆண்டுகளாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.அவை குறித்து முழுமையான ஆய்வு மேற்கொண்டு, விரைவில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்,”
தமிழகத்தில் சீர்மரபினர் சமூகத்தினர் நீண்டகாலமாக கோரி வரும் டி.என்.டி. ஒற்றைச் சான்றிதழ் குறித்து கேட்டபோது, “அது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அந்த சமூக மக்களுக்கு டி.என்.டி. ஒற்றைச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,”
மேலும், அரசு கள்ளர் உண்டு உறைவிடப் பள்ளிக்கான புதிய கட்டிடத்துக்கு பூமிபூஜை போடப்பட்டு 4 ஆண்டுகளாகியும் பணி தொடங்கப்படாதது குறித்து கேட்டபோது,
“இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து தாமதத்திற்கான காரணங்களை அறிந்து, கட்டிடப் பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்,”
அப்போது பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக ஆங்கில வழிக் கல்வியில் போதிய பயிற்சி இல்லை என்றும் தெரிவித்தனர்.அதற்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது தேனி மாவட்ட கலெக்டர் ஆர். வைத்தியநாதன்,
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது இப்ராஹிம், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.