7 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை;-கோவை ராயல் கேர் மருத்துவமனை சாதனை
கடுமையான இதய செயலிழப்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 7 வயது சிறுவனுக்கு அரிய மற்றும் சிக்கலான இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு புதிய வாழ்வு வழங்கியுள்ளதாக ராயல் கேர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் கூறுகையில், டைலேட்டட் கார்டியோமயோபதி (DCM) நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தீவிர சிகிச்சை மற்றும் ECMO ஆதரவின் மூலம் உயிர் காக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு மூளைச்சாவு அடைந்த நபரிடமிருந்து கிடைத்த இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாகவும், இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. பிரதீப் தலைமையிலான பல்துறை மருத்துவக் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த சாதனை சாத்தியமானதாகவும் அவர் கூறினார்.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பல்வேறு சவால்களை கடந்து தற்போது சிறுவன் முழுமையாக குணமடைந்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், உறுப்பு தானத்தின் அவசியத்தை இந்த வெற்றி மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுவதாகவும் டாக்டர் மாதேஸ்வரன் தெரிவித்தார்.