செங்கல்பட்டு, ஜூன் 28:
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அனந்தமங்கலம் ஊராட்சியில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க மதுராந்தகம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் வருகை தந்தார்.
இதனை எதிர்த்து, முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் பி. சுப்பிரமணியம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த மரகதம் குமரவேல் பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதனால், தொகுதி மக்களின் வாக்கு நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டிய அதிமுகவினர், அவர் கிராமப் பகுதிக்குள் நுழைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அச்சிறுப்பாக்கம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகளை கைது செய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களிலும் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன. அரசியல் கட்சியினரின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.