மதுரை நகரில் செல்லும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களால் இடையூறு ஏற்படுவதாக புகார் கூறப்பட்டது. எனவே மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி போக்குவரத்து துணை ஆணையர் வழிகாட்டுதலின்படி போக்குவரத்து போலீசார் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அதன்படி ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பஞ்சவர்ணம், சப்-இன்ஸ்பெக்டர் சந்தனகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்குள்ள தனியார், அரசு, மினி பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் என 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது 31 வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ‘ஹாரன்கள்’ இருந்தது கண்டறியப் பட்டது. உடனே அந்த ஒலிப்பான்கள் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் மாசு கட்டுப்பட்டு வாரிய அதிகாரி நித்யா, ஆரப்பாளையம் பஸ் நிலைய மேலாளர் ஜெயராஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.