துறையூரில் “தமிழ் நாடு அன்பு கரங்கள் அனைத்து தொழிலாளர் நலச்சங்கம்” துவக்க விழா மற்றும் முதல் செயற்குழு கூட்டம்

துறையூர் ஜீன் -29
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள “ஜான் ஹோட்டல் மீட்டிங் ஹாலில் சங்கரன் கோவிலை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்படும்”தமிழ் நாடு அன்பு கரங்கள் அனைத்து தொழிலாளர் நலச்சங்கம்” துவக்க விழா மற்றும் முதல் செயற்குழு கூட்டம் 28/06/2026 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.

“தமிழ் நாடு அன்பு கரங்கள் அனைத்து தொழிலாளர் நலச்சங்க மாநில தலைவர் கோவை பாலமலை ரெங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்மாநில துணைத்தலைவர் ராஜலட்சுமி (துறையூர்) வரவேற்புரை ஆற்றினார். தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய இவ்விழாவில் மாநில நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தனர்.இதில் சங்க மாநில செயலாளர் ஸ்ரீவில்லிப்புத்தூர் சந்தியாகு, பொருளாளர் கன்னியாகுமரி ஜெயாஸ்ரீதரன்,சட்ட ஆலோசகர் கன்னியாகுமரி வழக்கறிஞர் எமிலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இவ்விழாவில் மாநில துணை செயலாளர் தென்காசி நாராயணன், சங்க பிரதிநிதிகள் தேனி சங்கர், சங்கரன் கோவில் ராஜாராம், மாவட்ட பிரதிநிதிகள் தஞ்சாவூர் வரதராஜன், புதுக்கோட்டை நீலமோகன், மதுரை முத்துராஜ், விருதுநகர் மகேந்திரன், திண்டுக்கல் மணிகண்டன், ஈரோடு கலாமணி,தூத்துக்குடி பாலசுப்ரமணி, கன்னியாகுமரி பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை கூறி சிறப்பித்தனர்.இதனை தொடர்ந்து ஒருமனதாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தீர்மானம் -1,புதிதாக தமிழ் நாடு முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ் நாடு அன்பு கரங்கள் அனைத்து தொழிலாளர் நலச்சங்கம் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது.


தீர்மானம்-2,தமிழக அமைச்சரவையில் சமத்துவத்தோடு அமைச்சர் நியமனம் செய்ததற்கும், வாய்பேச்சு இல்லாமல் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியமைக்கும் தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான தமிழக அரசுக்கு இச்சங்கம் பாராட்டு மற்றும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.


தீர்மானம் -3, தேவையற்ற இடங்களில் தொழிலாளர்கள் ஓய்வறை என்ற பெயரில் கட்டுமானம் கட்டி நிநி இழப்பை ஏற்படுத்தியதை இச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.தீர்மானம்-4,
இதுபோன்ற நிதியினை உண்மையான தொழிளார்கள் பயன் பெறும் வகையில், கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்கவும், இறப்பு உதவித்தொகை ஐம்பதாயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கவும், ஓய்வூதியம் ரூபாய் 1,200ல் இருந்து 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், தீர்மானம் -5,புதிதாக பொறுப்பேற்றவர்களும், இனி பொறுப்பேற்க உள்ளவர்களும் தாலுக்கா அல்லது தொகுதிவாரியாக பொறுப்பாளர்களை நியமனம் செய்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விழாவிற்கான ஏற்பாடுகளை செய்த சங்க மாநிலத் துணைத் தலைவர் ராஜலட்சுமி நன்றி உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், திருச்சி என்றாலே திருப்பம் என்பதற்கு ஏற்ப தமிழ்நாடு அன்பு கரங்கள் அனைத்து தொழிலாளர் நலச்சங்கம் துவக்க விழா திருச்சி மாவட்டம் துறையூரில் துவங்கி உள்ளது.இந்த சங்கம் மென்மேலும் வளர்ந்து பல தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற உறுதுணையாக இருப்போம்.இவ்விழாவில் கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி என்று கூறி உரையை நிறைவு செய்தார்.தேசிய கீதம் பாடலுடன் விழா நிறைவு பெற்றது.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *