நாமக்கல்: தண்ணீர் இன்றி பயிர்கள் கருகும் நிலை – பரமத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
பரமத்திவேலூர், ஜூன் 29:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் தடுப்பணையிலிருந்து ராஜவாய்க்காலுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் திடீரென நிறுத்தப்பட்டதை கண்டித்து, இளம் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திங்கள்கிழமை பரமத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜேடர்பாளையம் தடுப்பணையிலிருந்து ராஜவாய்க்காலுக்கு ஆண்டு முழுவதும் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 17-ஆம் தேதி எந்தவித முன்அறிவிப்பும் இன்றி தண்ணீர் நிறுத்தப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இதனால் வெற்றிலை, வாழை, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள், கோரை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த நீர்வளத்துறை அதிகாரிகள், வரும் ஜூலை 3-ஆம் தேதி முதல் மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால் அதுவரை காத்திருந்தால் பயிர்கள் முற்றிலும் கருகிவிடும் என்பதால், உடனடியாக ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இளம் விவசாயிகள் சங்கத் தலைவர் சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராஜவாய்க்கால் தண்ணீரை நம்பி வெற்றிலை, வாழை, கோரை உள்ளிட்ட பயிர்களை அதிக முதலீட்டில் சாகுபடி செய்து வருகிறோம். குறிப்பாக வெற்றிலை சாகுபடி ஒரு குழந்தையை வளர்ப்பது போன்றது. தண்ணீர் இல்லாமல் இந்தப் பயிர்களை காப்பாற்ற முடியாது. எந்தவித முன்அறிவிப்பும் இன்றி தண்ணீர் நிறுத்தப்பட்டதால் வெற்றிலை தோட்டங்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியமாக பதிலளிக்கின்றனர். ஜூலை 3-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
அதற்குள் பயிர்கள் அழிந்துவிடும். எனவே தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, ராஜவாய்க்காலில் ஆண்டு முழுவதும் பழையபடி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மேலும், “நாளைக்குள் ராஜவாய்க்காலில் விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீர் திறந்து விடவில்லை என்றால், விவசாயிகள் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் கருகி, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய விவசாயிகள், அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தினர்.