காஞ்சிபுரத்தில் திருக்குறள் பயிற்சி நிறைவு விழா-120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கல்


காஞ்சிபுரம், ஜூன் 30–
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024 டிசம்பர் 31-ந் தேதி நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் அறிவித்த “திருக்குறள் திருப்பணிகள்” திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் திருக்குறளில் ஆர்வமும் புலமையும் மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளித்து தொடர் பயிலரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டது.


அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட மையத்தில் அரசு கா.மு.சு. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2025 நவம்பர் 1-ந் தேதி முதல் 2026 ஜூன் 7-ந் தேதி வரை மூன்று கட்டங்களாக மொத்தம் 30 திருக்குறள் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக நடத்தப்பட்டன.


இந்த வகுப்புகளில் திருக்குறளின் சிறப்புகள், அதன் வாழ்வியல் கருத்துகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரங்கள் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 120-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று பயன் பெற்றனர்.
பயிற்சி நிறைவு விழா அரசு கா.மு.சு. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) த. கோமதி மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கப் பள்ளிகள்) ச. எழில் ஆகியோர் சான்றிதழ்கள் மற்றும் எழுதுபொருட்களை வழங்கினர்.


நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் மு. சாந்தி, திட்டக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், திருக்குறள் பயிற்றுநர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, திருக்குறள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மேலும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *