தேனியில் த.வெ.க. நிர்வாகியை கண்டித்து தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்
போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது; மாலையில் விடுதலை
தேனி, ஜூன் 30:
தேனியில், தமிழக வெற்றிக்கழக (த.வெ.க.) நிர்வாகி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக கூறப்படும் பதிவை கண்டித்து, தி.மு.க. வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரியகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார் மற்றும் பழனி செட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் வி.பி.ஏ. மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் போடிநாயக்கனூர் தி.மு.க. நகரச் செயலாளர் ஆர். புருஷோத்தமன், ஒன்றியச் செயலாளர் எஸ்.பி. ஜயப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜா, ரமேஷ், எம். சங்கர், போடிநாயக்கனூர் நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர், பூதிப்புரம் பேரூராட்சி தலைவர் கவியரசு பால்பாண்டியன், வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதாசசி, தி.மு.க. இளைஞரணி நிர்வாகி சசி உள்ளிட்ட வடக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்னர் மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு பேசிய பெரியகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார், “இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமையும் செயல்களை ஏற்க முடியாது. பொறுப்பான பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சமூகத்திற்கு நல்ல மற்றும் சரியான செய்தியை வழங்க வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் நோக்கம்” என்றார்.