கோவை, ஜூலை 1:
கோவை மாநகராட்சியை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்ற நோக்கில், மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் “தூய்மையான கோவை உருவாக்குவோம்” என்ற விழிப்புணர்வு பேரணி இன்று வடவள்ளியில் நடைபெற்றது.
ரோட்டரி சங்கத்தின் புதிய ஆண்டின் முதல் நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த சேவை நிகழ்ச்சியை, கோவை மாநகராட்சி துணை ஆணையர் நர்மதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மருதமலை தேவஸ்தான பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணி, வடவள்ளி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.
பேரணியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பள்ளி என்.சி.சி. மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பொதுமக்களிடம் தூய்மையின் அவசியத்தை எடுத்துரைத்தனர். மேலும், பேரணி சென்ற வழியில் சாலையோரங்களில் மற்றும் சுற்றுப்புறங்களில் சிதறிக்கிடந்த குப்பைகளை நேரடியாக அகற்றி தூய்மைப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த செயல் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் மாருதி, கற்றல் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் ஸ்ரீனிவாசன், மாவட்ட முன்னுரிமை குழுத் தலைவர் மயில்சாமி, நிகழ்ச்சி தலைவர் ஜான் சிங்கராயர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சரவணன், வடவள்ளி ரோட்டரி சங்க நிறுவனத் தலைவர் மாணிக்கவாசகம், தலைவர் சந்தோஷ்குமார், செயலாளர் வினோத்குமார், ரோட்டரி மாவட்ட அதிகாரிகள், மருதமலை தேவஸ்தான பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஏராளமான ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
புதிய ஆண்டின் முதல் நாளிலேயே தூய்மையான கோவையை உருவாக்கும் நோக்கில் ரோட்டரி சங்கம் முன்னெடுத்த இந்த விழிப்புணர்வு பேரணி, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்தும் நிகழ்வாக அமைந்தது.