கம்பம், ஜூலை 1– தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி பேரூராட்சியில் அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவுப் பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் வெ.கணேசன் நேரில் ஆய்வு செய்தார்.
புதுப்பட்டி பேரூராட்சியின் செயல் அலுவலராக பணியாற்றி வரும் வெ.கணேசன், தினமும் அதிகாலை 5 மணிக்கே பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து, பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் தூய்மைப் பணிகள் நடைபெறும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். குறிப்பாக, குப்பைகள் அதிகமாக தேங்கும் பகுதிகள், பொதுஇடங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் மற்றும் திடக்கழிவுகள் சேகரிக்கப்படும் இடங்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நடைபெறும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து பணியாளர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
மேலும், ஒவ்வொரு தெருவாக சென்று வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வழங்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தினார். தூய்மைப் பணியாளர்களும் கழிவுகளை லேசான நெகிழி, கடின நெகிழி, காகிதம், உடைந்த மற்றும் உடையாத கண்ணாடி, இரும்பு, அட்டை, மின் கழிவுகள், மரக்கழிவுகள் மற்றும் பழைய சாமான்கள் என தனித்தனியாக பிரித்து சேகரித்து வருகின்றனர்.
சேகரிக்கப்படும் மக்காத கழிவுகள் மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பப்பட்டு, மக்கும் கழிவுகள் பதப்படுத்தப்பட்டு இயற்கை உரமாக மாற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து செயல் அலுவலர் வெ.கணேசன் கூறுகையில், “பேரூராட்சி பகுதிகளை தூய்மையாகவும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலுடனும் பராமரிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். வீடுகளிலேயே குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதுடன், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க அனைவரும் முன்வர வேண்டும்,” என்றார்.