அச்சிறுப்பாக்கம், ஜூலை 1:
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள இரும்புலி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஓசூர் மாரியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, மூத்த அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள், மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகளை நடத்தினர். கணபதி பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித கலசங்கள் கிராம பொதுமக்கள் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோவிலை வலம் வந்து விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு அருளாசி வழங்கப்பட்டது.
இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிராம பொதுமக்கள், விழாக்குழுவினர் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.