எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி, ஜூலை 1:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. சீர்காழி நகராட்சியின் 24 வார்டுகளில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொண்டு வரப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் குப்பைகள் மலைபோல் குவிந்து காணப்படுகின்றன.
இந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு இரவு எதிர்பாராத விதமாக குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி, குப்பைக் கிடங்கின் பல பகுதிகளில் தொடர்ந்து எரிந்து வருகிறது.
இதன் காரணமாக, குப்பைக் கிடங்கு அருகே உள்ள கோவிந்தராஜ் நகர், ஈசானிய தெரு, பிச்சைக்காரன் விடுதி, மனவெளி திடல், சர்க்கார் தெரு, கோயில் சேர்த்தி, கே.பி.எஸ். நகர், அருந்ததி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த மூன்று நாட்களாக புகைமூட்டத்தால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், நேற்று அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் பொறியாளர் மார்க்கோனி தலைமையில், நகர்மன்ற உறுப்பினர்கள் ரமாமணி, கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், நகர அதிமுக பொருளாளர் செந்தில்குமார், மதிவாணன் உள்ளிட்டோர் குப்பைக் கிடங்கிற்குள் சென்று ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.
அப்போது, நகராட்சி ஆணையர் சசிகுமார், நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆணையருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், சீர்காழி–புளிச்சக்காடு சாலையில் பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, மூன்று நாட்களாக எரிந்து வரும் குப்பையை உடனடியாக முழுமையாக அணைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ், நகராட்சி ஆணையர் சசிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கூடுதல் தீயணைப்பு வாகனம் மற்றும் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இந்த சாலை மறியல் காரணமாக சீர்காழி–புளிச்சக்காடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.