கோயம்புத்தூர், ஜூலை 1:
கோயம்புத்தூரில் பசி ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோயம்புத்தூர் பெண்டா ரவுண்டு டேபிள் 101 (CPRT 101) மற்றும் கோயம்புத்தூர் பெண்டா லேடீஸ் சர்க்கிள் 37 (LC 37) ஆகிய சமூக சேவை அமைப்புகள் இணைந்து நடத்தி வரும் ‘புராஜெக்ட் அன்னம் – மீல்ஸ் ஆன் வீல்ஸ்’ திட்டத்தின் மூலம் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு இலவச சத்தான உணவு வழங்கி சாதனை படைத்துள்ளன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த ஆண்டு (2025) ஆகஸ்டு 26-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், ஆரம்பத்தில் தினமும் 50 பேருக்கு உணவு வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, ஆண்டு முழுவதும் தினந்தோறும் உணவு வழங்கும் நிரந்தர சேவைத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.
இதற்காக ரவுண்டு டேபிள் இந்தியாவின் அடையாளத்துடன் ‘மீல்ஸ் ஆன் வீல்ஸ்’ என்ற சிறப்பு வாகனம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனம் மூலம் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வீடற்றோர், தினக்கூலி தொழிலாளர்கள், முதியவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு சுகாதாரமான, சத்தான உணவுகள் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவில் ரவுண்டு டேபிள் இந்தியா ஏரியா–7 தலைவர் டாக்டர் கௌஷிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், கோயம்புத்தூர் பெண்டா ரவுண்டு டேபிள் தலைவர் ஜி.ஆர். ஹர்ஷவர்தன், செயலாளர் கரண் ரஹேஜா, பொருளாளர் தருண் குப்தா, திட்ட ஒருங்கிணைப்பாளர் மயங்க் சிங்கால், கோயம்புத்தூர் பெண்டா லேடீஸ் சர்க்கிள் தலைவர் எஸ். காதம்பரி, செயலாளர் அக்ஷிதா அகர்வால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
“ஒரு உணவு உலகையே மாற்றாமல் இருக்கலாம்; ஆனால் பசியால் வாடும் ஒருவரின் உலகத்தை மாற்ற முடியும்” என்ற நோக்கத்துடன் இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கல்வி, சுகாதாரம், பசி ஒழிப்பு மற்றும் சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேவையாற்றி வரும் இந்த அமைப்புகள், சமூகத்தில் தேவையுள்ள மக்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருவதுடன், கோயம்புத்தூரில் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் முன்னணி தன்னார்வ அமைப்புகளாகவும் திகழ்கின்றன.