திருச்சி, ஜூலை 1–

திருச்சியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் அனைத்து தொழிலாளர்கள் நலச்சங்க கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

அந்த மனுவில், 2026 முதல் நிலுவையில் உள்ள ஓய்வூதிய விண்ணப்பங்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரையுடன் புதிய தொழிலாளர் நல வாரிய பதிவு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டும், அவை அலுவலகத்தில் நிராகரிக்கப்படுவதாகக் கூறி, அதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பழைய நல வாரிய அட்டையை புதுப்பிக்கும் போது வயது தொடர்பான ஆவணங்கள் இல்லாத தொழிலாளர்களுக்கு, வாரியத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வயதை அடிப்படையாகக் கொண்டு புதுப்பித்து வழங்க வேண்டும் என்றும் கோரினர்.

மேலும், 2025–2026 கல்வியாண்டுக்கான கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும், அவற்றை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

திருமண உதவித்தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னரும், திருச்சியில் நேரடியாக அலுவலகத்தில் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுவதாகவும், மற்ற மாவட்டங்களைப் போல ஆன்லைன் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்று உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு பணிகள் தொடர்பாக வரும் தொழிலாளர்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, போதிய கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், தொழிலாளர்கள் வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கும், நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தில் வீடு கோரி விண்ணப்பித்து அரசின் தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.) பெற்றவர்களுக்கும் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டது.

மனு அளிக்கும் நிகழ்ச்சியில் கூட்டமைப்பு தலைவர் சுப்பிரமணி, ஜெயராஜ், துறையூர் ராஜலட்சுமி, வினோத், லியோ ரெஜிஸ், மைக்கேல், ஆல்பர்ட், அமுதா உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *