கோயம்புத்தூர், ஜூலை 1, 2026:
அசோசியேசன் ஆஃப் அலையன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல், மாவட்டம் 250 S மற்றும் வி.ஜி.எம். அறக்கட்டளை ஆகியவை இணைந்து தேசிய மருத்துவர்கள் தின விழாவை கோயம்புத்தூரில் உள்ள வி.ஜி.எம். மருத்துவமனை அரங்கில் சிறப்பாக நடத்தின.
விழாவிற்கு அலையன்ஸ் மாவட்ட ஆளுநர் ஜி. சுந்தரம் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மாவட்ட சுகாதார இணை இயக்குநர் டாக்டர் வி. சுமதி, வி.ஜி.எம். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் மற்றும் சர்வதேச அலையன்ஸ் சங்க இயக்குநர் என். ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறப்பான மருத்துவ சேவையாற்றி வரும் 14 மருத்துவர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த மருத்துவர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விருது பெற்றவர்களில் டாக்டர் பசாந்தி (டாகா டென்டல் கிளினிக்), டாக்டர் கனக சபாபதி (வேதநாயகம் மருத்துவமனை), டாக்டர் பி.எஸ். ராஜன் (எல்சி மருத்துவமனை), டாக்டர் செந்தில்குமார் (அபிராமி மருத்துவமனை), டாக்டர் சரவணகுமார் மற்றும் டாக்டர் நளங்கிலி (ஜெம் மருத்துவமனை), டாக்டர் வம்சி மற்றும் டாக்டர் நளினி (வி.ஜி.எம். மருத்துவமனை), டாக்டர் தேவசேனா (தலைமை மருத்துவ அலுவலர், அன்னூர் அரசு மருத்துவமனை), டாக்டர் திப்பையா டி. (தொண்டாமுத்தூர்), டாக்டர் முருக பூபதி (தலைமை மருத்துவ அலுவலர், கோட்டூர் அரசு மருத்துவமனை), டாக்டர் வாணி ரங்கராஜ் (தலைமை மருத்துவ அலுவலர், தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனை), டாக்டர் ஜார்ஜ் தாமஸ் (ஆர்.எஸ்.புரம், கோயம்புத்தூர்) மற்றும் டாக்டர் அமர்நாத் (இணை இயக்குநர் அலுவலகம், கோயம்புத்தூர்) ஆகியோர் இடம் பெற்றனர்.
விழாவில் சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர்களான அலையன் குணசேகரன், அலையன் விஜயகுமார், அலையன் டி. ஸ்ரீனிவாசன் மற்றும் அலையன் ராஜேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்விற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், கோயம்புத்தூர் இன்னர் வீல் கிளப் டிரஸ்ட் சார்பில் வி.ஜி.எம். மருத்துவமனையின் மருத்துவர்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும், சமூகப் பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் டயாலிசிஸ் சிகிச்சைக்காக நிதியுதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இன்னர் வீல் கிளப் டிரஸ்ட் தலைவர் வீணா சங்கர், செயலாளர் பார்வதி ரவி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விஜிஎம் மருத்துவமனையின் எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுமன் வரவேற்புரையாற்றினார். விழாவின் நிறைவில் அலையன்ஸ் மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் எஸ். பிரபாகரன் நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வி.ஜி.எம். மருத்துவமனை மருத்துவர்களான டாக்டர் சுமன், டாக்டர் மதுரா பிரசாத், டாக்டர் மித்ரா பிரசாத், டாக்டர் வம்சி மூர்த்தி, அலையன்ஸ் சங்க மாவட்ட செயலாளர்கள் ரவீந்திரன், ராய் தாமஸ், அமைச்சரவை ஆலோசகர் பாலசுப்ரமணியம், தலைவர் டாக்டர் சுபத்ரா ஐயங்கார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.