கரூர், ஜூலை 2:
தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த பசுமை தாயகம் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் செளமிய அன்புமணிக்கு, கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலையப்பசாமி இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், கரூர் மாவட்ட பாமக நிர்வாகிகளை அவர் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, ஜவுளி உற்பத்திப் பொருட்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, கரூர் காந்திகிராமத்தில் வசிக்கும் தனது குடும்ப நண்பரும் தோழியுமான வேதா மாமியை நேரில் சந்தித்த முனைவர் செளமிய அன்புமணி, அவரிடம் ஆசி பெற்றார். மேலும், வேதா மாமிக்கு பட்டு சேலை, படுக்கை விரிப்பு (பெட்சீட்), சுடுநீர் வைக்கும் இயந்திரம், ஃப்ளாஸ்க் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கினார்.
பின்னர், பாமக கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத் புதிதாக கட்டியுள்ள “அன்பு இல்லம்” இல்லத்திற்கு சென்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, பிரேம்நாத் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, குடும்பத்தினருடன் நினைவுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சிகளில் பாமக மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி மற்றும் கரூர் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.